வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள இந்தக் குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இலங்கை பொலிஸார் இணைந்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடியவர்களைத் தண்டிப்பதற்கும் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசேட திட்டத்தின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.

