கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை ஏமாற்றும் வகையிலும் இனந்தெரியாத நபர் ஒருவர் திட்டமிட்ட பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் தன்னை பிரதி அமைச்சரின் உத்தியோகபூர்வ பிரதிநிதி என அறிமுகப்படுத்திக்கொண்டு, தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களைத் தொடர்பு கொள்கிறார். அவர் பல்வேறு காரணங்களைக் கூறி நிதி உதவி கோருவதுடன், பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி விபரங்களைத் திரட்ட முயற்சிப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இத்தகைய நபர்களுக்கும் தனக்கும் அல்லது தனது அமைச்சிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“பொதுமக்கள் இத்தகைய போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாத நபர்களிடம் பணத்தையோ அல்லது உங்கள் இரகசியத் தகவல்களையோ பகிர வேண்டாம்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
- சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.
- உத்தியோகபூர்வமற்ற நபர்களிடம் பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்கவும்.
- இந்த எச்சரிக்கை செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்து அவர்களைப் பாதுகாக்கவும்.


