உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்துள்ளது பாகிஸ்தான். வருவாய் பங்கீடு மற்றும் இந்திய அணி பாகிஸ்தான் வருவது குறித்த கோரிக்கைகளால் ஐசிசி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பெப்ரவரி 15 மோதல் நடக்குமா?
டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
நேற்று (பெப்ரவரி 08) லாகூரில் ஐசிசி உயரதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இடையே நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த அதிரடி கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் அந்த 3 நிபந்தனைகள் என்ன?
- பாதுகாப்பு உறுதிமொழி: இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். (இதற்கு ஐசிசி உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது).
- எதிர்காலத் தொடர்களுக்கான உத்தரவாதம்: இந்திய அணி எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் என்பதை ஐசிசி எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
- வருவாய் பங்கீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் ஒளிபரப்பு மற்றும் விளம்பர வருவாயில் பாகிஸ்தானுக்கு கூடுதல் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.
ஐசிசி மற்றும் பிசிசிஐ-ன் நிலைப்பாடு:
பாகிஸ்தானின் முதல் நிபந்தனையை ஏற்பதில் சிக்கல் இல்லை என்றாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிபந்தனைகள் நேரடியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) தொடர்புடையவை.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து வரும் நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டால் அது பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் இடையிலான மோதலாக வெடிக்கக்கூடும்.

