
மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானத்தில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த நகைகளைத் திருடுவதற்காகக் கல்லறையைத் தோண்டிய மயானக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மயானக் காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த 15-ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் ஏழாம் நாள் நினைவுச் சடங்குகள் நேற்று (22) நடைபெற்ற நிலையில், அவரது மகள் மயானத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டுள்ளார்.
அங்கு சென்ற மகள், மூவர் தனது தாயின் கல்லறையைத் தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர்கள், மதில் வழியாகப் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.
மகளின் முறைப்பாட்டின் அடிப்படையில் மொரட்டுவை பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் அந்த மயானத்தின் காப்பாளர் எனத் தெரியவந்தது.
மது அருந்திய நிலையில், மயானத்தில் குழி தோண்டும் ஏனைய இருவருடன் இணைந்து, சடலத்திலிருந்த நகைகளை எடுப்பதற்காகவே இந்தக் கல்லறையைத் தோண்டியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இறந்த பெண்மணி அணிந்திருந்தது தங்க நகைகள் எனத் தவறாகக் கருதி அவர்கள் இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், சடலத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் என உயிரிழந்தவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சவப்பெட்டியைத் திருடும் நோக்கம் இவர்களுக்கு இருந்ததா என்பது குறித்தும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
எங்களைப் பின்தொடருங்கள் – ELankaMirror 🇱🇰 🌐 Website: https://elankamirror.lk 📲 உடனடிச் செய்திகளுக்கு எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

