நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் தொன்மையைப் பேணுவதற்கும் அரசியலமைப்பு ரீதியாகக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது, அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய உள்நாட்டு ஆட்சியாளர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகிக்கொள்ள முடியாது.”
விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும். பக்தர்கள் வழங்கும் தங்க நகைகள் மற்றும் ஏனைய காணிக்கைகள் அனைத்தும் அந்தந்த மத ஸ்தலங்களுக்குச் சொந்தமானவை.
இந்த நடைமுறைகளை மீறி, மத ஸ்தலங்களின் சொத்துக்களில் கைவைக்க முற்பட்டால், அதன் விளைவாக நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.”
அனைத்துக் கட்சிகளினதும் கடமை
“பௌத்த மதத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது ஒரு கட்சியின் கடமை அல்ல. இதனை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் சூழலில், மத விவகாரங்கள் மற்றும் விகாரைகளின் நிர்வாகம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் இந்த எச்சரிக்கை மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

