முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெவ்வேறு விசாரணைப் பிரிவுகளில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு: பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றைய தினம் தம்மால் சமூகமளிக்க முடியாது எனவும், அதற்கு 2 வார கால அவகாசம் வழங்குமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், பெப்ரவரி 3 ஆம் திகதி கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு மீண்டும் அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு: இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவையும் அதே தினத்தில் (பெப்ரவரி 3) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பின் போது நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

