உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானின் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
ஈரானிய தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி:
- அமெரிக்கா & இஸ்ரேல்: இந்த இரு நாடுகளின் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பது முழுமையாகத் தடை செய்யப்படும்.
- எதிர்ப்பு நாடுகள்: ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
- புதிய கட்டணம்: தடை செய்யப்படாத ஏனைய நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையை கடப்பதற்கு விசேட கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த புதிய கட்டண முறையை ஓமானுடன் இணைந்து அமுல்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 20% இந்தப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இந்த முடிவு உலக எரிபொருள் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
கடல்சார் புலனாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, மத்திய கிழக்கில் போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து சுமார் 95% வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகையச் சூழலில் ஈரான் விதித்துள்ள புதிய கட்டணங்கள் மற்றும் தடைகள் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தை மேலும் சிக்கலாக்கும் என அஞ்சப்படுகிறது.



