ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E போர் விமானத்திலிருந்து மாயமான இரண்டாவது விமான வீரரும் (Colonel) உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இந்த விமானம் வீழ்த்தப்பட்ட நிலையில், ஈரானியப் படைகளின் கடும் தேடுதல் வேட்டைக்கு மத்தியிலும் அமெரிக்கச் சிறப்புப் படைகள் இந்த “அதிசய” மீட்புப் பணியைச் சாத்தியமாக்கியுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிக்கை:
தனது ‘Truth Social’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்:
“நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்! (WE GOT HIM!). ஈரானின் துரோக மலைப்பகுதிகளில் எதிரிகளின் தேடுதலுக்கு மத்தியில் மறைந்திருந்த எமது வீரரை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. அவர் காயமடைந்துள்ளார், ஆனால் அவர் நலமாக இருப்பார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இதுவும் ஒன்று.”
ஈரானின் எதிர்த்தாக்குதல்:
இந்த மீட்பு நடவடிக்கையின் போது மற்றுமொரு அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் C-130 போக்குவரத்து விமானம் மற்றும் இரண்டு Black Hawk ஹெலிகொப்டர்களை இஸ்பஹான் (Isfahan) மாகாணத்தில் வைத்துத் தமது வான் பாதுகாப்புப் படைகள் அழித்துள்ளதாக ஈரானியப் புரட்சிகர இராணுவம் (IRGC) தெரிவித்துள்ளது.
கடும் துப்பாக்கிச் சூடு:
இந்த மீட்புப் பணியின் போது அமெரிக்கச் சிறப்புப் படைகளுக்கும் (Special Forces) ஈரானியப் படைகளுக்கும் இடையில் தரைவழித் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளதாக சி.பி.எஸ் (CBS) செய்திகள் தெரிவிக்கின்றன. வீரர்களை மீட்கும் போது சேதமடைந்த அமெரிக்காவின் இரண்டு போக்குவரத்து விமானங்களை, அவை எதிரிகளிடம் சிக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கப் படைகளே வெடிவைத்துத் தகர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இறுதி எச்சரிக்கை:
மாயமான இரு வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஈரானுக்குத் தான் வழங்கிய 48 மணிநேரக் கெடு இன்னும் அமுலில் இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரான் மீது “நரகமே இறங்கும்” என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


