அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் (ஏப்ரல் 11, சனிக்கிழமை) பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களுக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த 5 வாரங்களாக நீடித்த போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விடுமுறை விபரங்கள்:
இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் மற்றும் ராவல்பிண்டி நிர்வாகம் இணைந்து ஏப்ரல் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளி) உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளன. சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- அலுவலகங்கள் மூடல்: அனைத்து கல்வி நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
- அத்தியாவசிய சேவைகள்: பொலிஸ், வைத்தியசாலைகள், மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போல் இயங்கும்.
- ரெட் ஸோன் (Red Zone) முடக்கம்: இஸ்லாமாபாத்தின் முக்கிய இராஜதந்திரப் பகுதியான ‘ரெட் ஸோன்’ முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், கப்பல் கொள்கலன்களைக் (Containers) கொண்டு வீதிகள் மறிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க – ஈரான் பிரதிநிதிகள் வருகை:
இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட குழு நாளை (10) பாகிஸ்தான் வந்தடையவுள்ளது. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), சமாதான தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஈரான் தரப்பில் ஈரானிய தேசிய பாதுகாப்பு சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் இந்த இராஜதந்திர முயற்சி வெற்றியடைந்தால், ஈரானின் 10 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) நிரந்தரமாகத் திறக்கப்பட்டு, மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


