நாட்டில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்றும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மற்றும் இறக்குமதி குறித்த தற்போதைய நிலவரம் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார்.
ஜூன் மாதம் வரையிலான கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக எரிபொருள் கப்பல்களைத் தடையின்றி இலங்கைக்குக் கொண்டுவருவதற்காகப் பல வெளிநாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (08) புதன்கிழமை, டீசல் ஏற்றிய மூன்றாவது கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இது தற்போது இறக்கப்பட்டு விநியோகத்திற்காகத் தயாராகி வருவதால், சந்தையில் டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும், எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியாக இலங்கையை வந்தடைந்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், வழமை போல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ELankaMirror #FuelUpdateSL #CPCSriLanka #PetrolDieselSL #SriLankaNews #BreakingNews #TamilNews #LankaMirror #EnergySecurity #ColomboNews


