இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பு இன்று (13) நண்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மாற்று தீர்வுகளை ஆராயும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரஷ்ய தூதுவருடன் கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிப்பதாக தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கைக்கு தேவையான எந்த நேரத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்



